பட்ஜெட், மானிய கோரிக்கைகள், நிதி ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு நாளுக்கு முன்னதாகவே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர், இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. ஜனவரி 31- ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், 29 அமர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மக்களவையில் 22.2 மணி நேரமும், மாநிலங்களவையில் 18.9 மணி நேரமும் கேள்வி நேரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களவையில் 182 கேள்விகளுக்கும், மாநிலங்களவையில் 141 கேள்விகளுக்கும் மத்திய அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.
இக்கூட்டத்தொடரில், குற்றவியல் நடைமுறை மசோதா 2022, டெல்லி முனிசிபால் கார்ப்பரேசன் சட்டத்திருத்த மசோதா 2022 உள்ளிட்ட ஏழு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக குற்றவியல் நடைமுறை மசோதா 2022- ன் மீது மக்களவை, மாநிலங்களவையில் சுமார் 2 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
இவைத் தவிர குடியரசுத்தலைவரின் உரை மீது நன்றித் தெரிவிக்கும் தீர்மானம், மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் உள்ளிட்ட ஆறு விவகாரங்கள் தொடர்பாக, மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 31- ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு நாளுக்கு முன்னதாக, கூட்டத்தொடர் முடிவதாக அறிவித்த ஓம் பிர்லா, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.