Skip to main content

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் சலசலப்பு; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு காயம்! 

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
Parliamentary Joint Committee Meeting Trinamool Congress MP incident

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி  (08.08.2024) மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். அப்போது இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

அதன்படி, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவில், ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, இம்ரான் மசூத், நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஜெகதாம்பிகா பால் தலைமையிலான இந்த கூட்டுக் குழு, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்கள் சரியா?, அதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்பதையெல்லாம் முடிவு செய்து தங்களது பரிந்துரையை மக்களவையில் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் எம்.பி.க்கள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (22.10.2024) நடைபெற்றது. அந்த வகையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கூட்டத்தில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்காபாத்யாய் ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது கோபத்தில் கல்யாண் பேனர்ஜி தனது அருகில் இருந்து கண்ணாடி டம்ளரை எடுத்து மேசையில் அடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் உடைந்த கண்ணாடி டம்ளரின் துண்டு ஒன்று கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கல்யாண் பேனர்ஜி அருகில் இருந்த எம்.பி.க்கள் முதலுதவி செய்தனர். அதன் பின்னர் கல்யாண் பேணர்ஜிக்கு கையில் நான்கு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அதே சமயம் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா மீதான கருத்துக் கேட்கும் கூட்டம் முறையாக நடக்கவில்லை என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு சாட்டினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்யாண் பேனர்ஜி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், பாஜக எம்.பி.யான அபிஜித் கங்கோபாத்யாய் ஏற்கனவே கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்