மக்களவையில் முத்தலாக் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். பின்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் "முத்தலாக் தடை" மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் தடை மசோதா இருப்பதாகவும், ஏன் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார். இந்த மசோதா மூலம் இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என கூறினார். ஆனால் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.