பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி: மோடியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்! - ராகுல்காந்தி
இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி நொறுக்கிவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ராகுல்காந்தி, ‘இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மோடி படுமோசமாக நொறுக்கிவிட்டார். பொறுப்பற்ற அபாயகரமான தனது முடிவுகளால் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அவசர அவசரமாக ஜிஎஸ்டியை அமுல்படுத்தினார்’ என பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ‘மூத்த பொருளாதார ஆலோசகர்களிடமும், நாடாளுமன்றத்திலும் கலந்தாலோசிக்காமல் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தார். இது இந்தியாவிற்கு பேரழிவுச் செலவை ஏற்படுத்திவிட்டது. பொறுப்பில்லாமலும், அவசரமாகவும் கொண்டுவந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டியும் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறுதொழில்புரிவோரும், விவசாயிகளும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதைப் போல பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டதன் விளைவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% வீழ்ச்சியைத்தான் அவர்கள் தந்திருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
அரசியல் சீர்திருத்தம் குறித்து..
நிர்வாகம் சீர்திருத்தம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதனிலும் மேலாக அரசியல் சீர்திருத்தமும் செய்யவேண்டியிருக்கிறது. இந்தியாவின் அரசியல் இயந்திரத்திலேயே பிரச்சனை இருக்கிறது. செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதபட்சத்தில், எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
சட்டம் அமைக்கவேண்டிய அமைச்சர்கள் சாலை அமைப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். சட்டத்தை உருவாக்குவதுதான் அவர்களது தலையாய கடமை. இதுதான், இந்தியாவில் ஏற்பட்டுள்ள அடிப்படை அரசியல் பிரச்சனை. இவ்வாறு பேசியுள்ளார்.
- ச.ப.மதிவாணன்