கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவுக்கு காதலர் தினமாக அல்லாமல் அதிர்ச்சி தரும் தீவிரவாத தாக்குதல் நடந்த தினமானது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடையச் செய்து உலகையே கவனிக்க வைத்த புல்வாமா தாக்குதலில் நாற்பது வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து வந்த வேளையில், இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வந்தது. பிப்ரவரி 26ஆம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை வான் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் முன்னூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தகவல் தரப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 27 அன்று இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தாக்கப்பட்டதால் செயலிழந்து விமானத்திலிருந்து வெளியேறி பாராஷூட் மூலம் குதித்த இந்திய விமானப்படை விமானி 'விங் கமாண்டர்' அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கியதாக தகவல் வெளிவந்தது. பாகிஸ்தான் தாக்கவில்லை, விமானம் செயலிழந்ததாலேயே அபிநந்தன் குதித்தார் என்றும் செய்திகள் வெளிவந்தன. அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியானது. அவர்களிடமிருந்து அபிநந்தனை மீட்டு பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்தது. பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவர் அபிநந்தனை விசாரிக்கும் வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் தன்னை நாகரிகமாக நடத்துவதாகத் தெரிவித்திருந்தார் அபிநந்தன். அந்த வீடியோவில் அவர்களது கேள்விகளுக்கு அபிநந்தன் பதிலளித்த விதமும், அந்த சூழ்நிலையை அபிநந்தன் அணுகிய முறையும் அவர்கள் கேட்கும் தகவல்களை தர உறுதியாகவும் மென்மையாகவும் மறுத்த விதமும் இந்தியா முழுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அபிநந்தன் மீண்டும் இந்தியா வரவேண்டுமென பிரார்த்தனைகளும் வேண்டுகோள் வைப்பதும் நிகழ்ந்தன.
மறுநாள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அமைதி நிலவ வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தார். மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர். நேற்று மாலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லை வழியாக அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று காலையிலிருந்தே எதிர்பார்ப்பில் இருந்தது இந்தியா. வாகா எல்லையில் மக்கள் குவிந்தனர். மாலை வருவார், வருவார் என மக்களும் செய்தியாளர்களும் காத்திருக்க, வருகையில் தாமதம் ஏற்பட்டது. இரவு சுமார் 9.20 க்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன். மிடுக்கான நடை, தனது ஸ்டைலான மீசையுடன் நடந்து வந்த அபிநந்தனை மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். செய்தியாளர்களை சந்தித்த இந்திய அதிகாரிகள் தாமதத்திற்கான காரணம் குறித்து தங்களுக்கு தெரியவில்லை என்று கூறி சிறிது நேரத்திலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துச் சென்றனர்.
இப்படியிருக்க, நேற்று இரவு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு சற்று முன்பு பாகிஸ்தான் ஊடகங்கள் வாயிலாக ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தான் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது, விமானம் சுடப்பட்டது, விமானத்தில் இருந்து கீழே குதித்தது, பின்னர் ஒரு கும்பலிடம் சிக்கியது, அங்கிருந்து ராணுவ வீரர்கள் இருவர் தன்னை மீட்டது என நிகழ்வுகளை வரிசையாக சொல்கிறார் அபிநந்தன். பாகிஸ்தான் ராணுவம் தனக்கு முதலுதவி அளித்ததாகவும், பின்னர் சிகிச்சை அளித்ததாகவும் குறிப்பிடும் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் அணுகுமுறையை பாராட்டி அது அமைதி தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சில ஊடகங்களில் வந்த செய்திகள் குறித்தும் விமர்சிக்கிறார். சிறிது நேரம் மட்டுமே ஓடும் அந்த வீடியோ பல முறை கட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அபிநந்தனை விடுவிக்கும் இம்ரானின் அறிவிப்பால் நல்ல வகையில் பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் இந்த வீடியோ கேள்விகளை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவை தயார் செய்ததில்தான் தாமதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.