இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் ஆவர். இவர் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016- ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடி குலபூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்தது.
சர்வதேச ஒப்பந்தங்களின் படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதியளித்தது. அதனை தொடர்ந்து இந்திய துணை தூதர், பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், குல்பூஷன் ஜாதவ் கடுமையான அழுத்ததில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் தந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.