மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இருப்பினும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தநிலையில், நவம்பர் 26ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ராகேஷ் திகைத் தனது ட்விட்டர் பதிவில், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு நவம்பர் 26ஆம் தேதிவரை அவகாசம் உள்ளது. நவம்பர் 27ஆம் தேதி முதல், கிராமங்களிலிருந்து விவசாயிகள் ட்ராக்டர் மூலம் டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் போராட்ட களத்திற்கு வந்து, அந்தப் பகுதியை முழுமையாக அடைத்து போராட்டத்தைப் பலப்படுத்துவார்கள்" என கூறியுள்ளார்.