தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் இவ்வாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன. இதில், மேற்குவங்க மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயன்று வரும் சூழலில், பாஜகவும் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டங்களை வகுத்துவருகிறது.
இந்நிலையில், மேற்குவங்க தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும் என அண்மைக்காலமாகப் பேசப்பட்டு வந்த சூழலில், தற்போது அதை உறுதி செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் ஒவைசி. பீகார் தேர்தலில் ஐந்து இடங்களில் வெற்றிபெற்று பல பெரிய கட்சிகளுக்கும் அதிர்ச்சியளித்த ஏஐஎம்ஐஎம் கட்சி, இவ்வாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நேற்று மேற்குவங்க மாநிலம் ஹுக்ளி நகரில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதில், அம்மாநில இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களில் முக்கியமானவரான அப்பாஸ் சித்திக்குடன் ஒவைசி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவோம். அப்பாஸ் சித்திக் தலைமையில் எங்கள் கட்சி போட்டியிடும். அவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.