மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூட்டம் நடத்தினர். இதனையடுத்து வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கை நாள் வரை வாக்கு இயந்திரங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் அனைத்து தலைவர்கள் சார்பாகவும் மனு அளிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர்களின் பிரதிநிதியான குலாம் நபி ஆசாத், "வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதாக கூறியதை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒப்புகைச் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் வலியுறுத்தியுள்ளோம்" என கூறினார்.