பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலை பட்கால் நகர் மசூதிக்கும் ஏற்படும் என பாஜக எம்.பி. ஆனந்த்குமார் ஹெக்டே தெரிவித்த கருத்திற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்.பியாக இருப்பவர் ஆனந்த்குமார் ஹெக்டே. இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், “பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலைதான் பட்கால் நகரில் உள்ள மசூதிக்கும் ஏற்படும். இது என்னுடைய முடிவல்ல; இந்து சமுதாயத்தின் முடிவு. சிராசி சி.பி. பஜார் பகுதியில் இருக்கும் மசூதி, இதற்கு முன்பு விஜய விட்டல் கோவிலாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திரா காந்தியையும் அவரது குடும்பத்தை பற்றியும் பேசியிருந்தார். அதில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் பசுவதை தடைச் சட்டம் குறித்த போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பல துறவிகள் உயிரிழந்தனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பசுக்கள் வெட்டப்பட்டன. அந்த நேரத்தில் கர்பத்ரி மகாராஜ் என்ற துறவி ஒருவர், 'கோபாஷ்டமி' நாளிலேயே உங்கள் குலம் அழிந்துவிடும் என்று இந்திரா காந்தியை சபித்தார். அதேபோன்று, 'கோபாஷ்டமி' நாள் அன்று விமான விபத்தில் சஞ்ஜய் உயிரிழந்தார். அதேபோன்று மற்றொரு கோபாஷ்டமி நாளில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, “உத்தர கன்னட எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திய மொழி அவரது கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது அரசியல் சட்டத்தையே மாற்றுவேன் என்று கூறிய அனந்த் குமார் ஹெக்டேவிடம் சிறந்த கலாச்சாரத்தை எதிர்பார்க்க முடியுமா? எனத் தனது சமூக வலைத்தளப் பக்கதில் பதிவிட்டுள்ளார்.