காவிரி நீர் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சபாநாயகர் வைத்தியலிங்கம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது, புதுச்சேரிக்கு தர வேண்டிய 7 டிஎம்சி நீரை மாதந்தோறும் சுழற்சி முறையில் வழங்க வலியுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரித்தை அமைக்க அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அழுத்தம் கொடுப்பது, கால தாமதம் ஆனால் அனைத்து கட்சி நிர்வாகிகளும் டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்துவது. காரைக்கால் கடைமடை பகுதிக்கு நீர் வருவதற்கு உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்துவது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.