நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளன. வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. முதற்கட்டமாக எகிப்தில் இருந்து வெங்காயம் திருச்சி வந்தது. இதனால் வெங்காயத்தின் விலை சற்று குறைந்த நிலையில், எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைத்திருக்க மேலும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு. விலை உயர்வு எதிரொலியால் சில்லரை விற்பனையாளர்கள் 2 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும். 5 மெட்ரிக் டன் இருப்பு வைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.