இந்தியாவில் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 57 பேருக்கும், மஹாராஷ்ட்ராவில் 54 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 123 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (23/12/2021) ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒமிக்ரானைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.