கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.
தற்போதைய நிலவரப்படி 233 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கோர விபத்தினைத் தொடர்ந்து, காணொளி வாயிலாக பிரதமர் கலந்துகொள்வதாக இருந்த கோவா - மும்பை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று கலைஞரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு செம்மொழிப் பூங்கா இரண்டு நாள் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கண்காட்சியை முதல்வர் திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தின் காரணமாக முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடக்கும் என்றும் திமுக அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.