ஒடிஷா மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு, மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் சுமார் 21 மக்களவை தொகுதிகளும், 147 மாநில சட்டமன்ற தொகுதிகளும் உள்ள நிலையில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஒடிஷா மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியான பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 20 ஆண்டுக்களுக்குள் மேல் தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார். இருப்பினும் இந்த முறையும் பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதனால் அதிகம் பலம் வாய்ந்த கட்சியாகவும், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக நவீன் பட்நாயக் திகழ்ந்து வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்கள், தேசிய கட்சித் தலைவர்கள் மதிக்கும் முக்கிய தலைவராக பட்நாயக் இருக்குகிறார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியிலும், அதற்காக மாநில கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களை சந்தித்து வருகிறார். இந்த அணியில் ஒடிஷா மாநிலம் இடம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஒடிஷா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு வழங்க ஒப்புதல் அளித்தால் பிஜு ஜனதா தள கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயார் என பிஜு ஜனதா தள செய்தித் தொடர்பாளர் அமர் பட்நாயக் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநில முதல்வர்கள் டெல்லியில் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வரும் சூழலில் பிஜு ஜனதா தள கட்சியின் அறிவிப்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் மூன்றாவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒடிஷா மாநில முதல்வரை சந்தித்து அவரின் ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.