தன் குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம்பெற்றுவிட்ட நிலையில், தனது பெயர் மட்டும் அதிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து, அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒரு கேள்வி எழுப்பிஇருக்கிறார்.
பிரிவினை காலத்தில் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அடையாளம் காண, தேசிய குடியுரிமைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதிஒதுக்கி, கணக்கெடுப்பை முடுக்கிவிட்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு. சென்ற ஆண்டு வெளியான என்.ஆர்.சி. கணக்கெடுப்பில், அசாமைச் சேர்ந்த 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சைக்குள்ளானது.
இதன்பிறகு, முறையான ஆவணங்களைச் சரிபார்க்க அவகாசம் கொடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கின் மூலம், ஆவணங்கள் சரிபார்ப்புக்கான அவகாசம் அதிகப்படுத்தப்பட்டது. ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில், இன்று என்.ஆர்.சி. பதிவேட்டின் விவரங்கள் வெளியிடப்பட்டன. சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தால், மாநிலத்தில் பதற்றம் நிலவலாம் என்பதை உணர்ந்த ஆளும் பாஜக அரசு, ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்புக்காக குவித்தது.
இந்நிலையில், இன்று வெளியான என்.ஆர்.சி. பதிவேட்டின் இறுதி விவரத்தில், 19 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், இந்தியாவில் அமைக்கப்படும் தடுப்புக் காவல் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். ஆவணங்கள் சமர்ப்பிப்பில் அல்லது சரிபார்ப்பில் தவறு நடந்தால், இந்தியக் குடிமக்களே கூட இந்த நிலைக்குத் தள்ளப்படலாம்.
விஷயம் இப்படியிருக்க, இந்தப் பதிவேட்டில் தனது பெயர் இடம்பெறவில்லை என்பதைப் பதிவிட்டுள்ள அசாருதீன் எனும் இளைஞர், “என் தந்தை, மூத்த மற்றும் இளைய சகோதரர்களின் பெயர்கள் என்.ஆர்.சி. பதிவேட்டில் இடம்பெற்றுவிட்டது. ஆனால், எனது பெயரை நிராகரித்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. அவர்கள் சமர்ப்பித்த அதே சான்றிதழ்களைத் தான் நானும் கொடுத்தேன். பின் எப்படி இது நடந்தது” என தன் ட்விட்டர் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோரை டேக் செய்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
என்.ஆர்.சி. பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கிளப்பி இருக்கும் இதுபோன்ற குழப்பங்களால், அசாம் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். பதற்றம் அடைய வேண்டாம், அவகாசம் கொடுப்போம் என்று ஆறுதல் படுத்தி இருக்கிறார் அசாம் முதல்வர்.