இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லையென்றால் நாட்டில் சமஉரிமை என்பது இல்லாமல் போகும் என பா.ஜ.க. எம்.பி. சாவித்ரி பாய் பூலே தெரிவித்துள்ளார்.
தலித் எம்.பி.யான சாவித்ரி பாய் பூலே இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசிய அவர், ‘நாம் அனைவரும் ஜனநாயகத்தைக் காப்பதற்காக ஒன்றுபட்டு போராடவேண்டும். அனைவரின் உரிமைகளும் காக்கப்பட வேண்டும். சில சமயங்களில் உச்சநீதிமன்றம் அனைவருக்கு சமஉரிமை கிடைக்கவேண்டும் என்கிற பெயரில் இடஒதுக்கீட்டினை ரத்துசெய்யும் கருத்துகளை முன்வைக்கும். அரசியல் சாசன சட்டத்தைப் பாதுகாப்போம் என்று அதே உச்சநீதிமன்றம் சொல்லும். ஒருவேளை இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், மக்களின் உரிமைகள் பாதிப்பைச் சந்திக்கும்’ என பேசியுள்ளார்.
முன்னதாக, சாவித்ரி பாய் பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னா இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மகா புருஷர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.