கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.
இதன்தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதனையடுத்து ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அம்மாநில கல்லூரிகளுக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளித்து நேற்று உத்தரவிட்டார். இந்தநிலையில் பெங்களூரில் உள்ள பள்ளிகள், பல்கலை முன் கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் வாயிலிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் அனைத்து வகையான கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் கர்நாடக காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், "ஹிஜாப் பள்ளி சீருடையின் அங்கம் இல்லை. எனவேதான் பள்ளிகளில் அது அணியப்படுவது தடை செய்யப்பட வேண்டும். மரபுகளை மக்கள் தங்கள் வீடுகளிலேயே பின்பற்ற வேண்டுமே தவிர பள்ளிகளில் அல்ல. பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவது தொடர்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என தெரிவித்தார். இதனால் மத்திய பிரதேசத்திலும் ஹிஜாப்பிற்கு தடை விதிக்கப்படுமா என பரபரப்பு எழுந்தது.
இந்தநிலையில் மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ஹிஜாப் அணிவதை தடை செய்வது குறித்து அரசு ஆலோசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் அணிவது குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. ஹிஜாப்பிற்கு தடை விதிப்பது தொடர்பான எந்த திட்டமும் மாநில அரசின் பரிசீலனையில் இல்லை. இதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை" என கூறியுள்ளார்.