புதுச்சேரி சட்டப்பேரவை கருத்தரங்க அறையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், " புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் பொங்கி எழுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி 2011ல் கட்சி தொடங்கியபோது மாநில அந்தஸ்து என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து கட்சி தொடங்கித்தான் ஆட்சி அமைத்தார்.
அதற்குப் பின் ஏற்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்; நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைக்க வேண்டும்; மாநில கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துத்தான் ரங்கசாமி கூட்டணியில் இணைந்தார். கடந்த ஆட்சியாளர்கள் மாநில அந்தஸ்து வேண்டுமென்று போராடியது இல்லை. அதற்கு மாறாக அவர்கள் அமைச்சரவைக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் போராடினர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற கடந்த ஆட்சியில் ஏதாவது ஒரு முயற்சி எடுக்கப்பட்டதா? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற ரங்கசாமியின் நல்ல முயற்சியை கொச்சைப்படுத்த வேண்டாம். ஒருமித்த கருத்து இருந்தால் எங்களுடன் இணைந்து போராடலாம். அப்படி இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகள் திண்ணை எப்போது காலியாகும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது போன்று எதுவும் நடக்காது.
கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்றார் போன்று அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் நடந்து கொள்கிறார். அவர் தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால் அவர் தொகுதி மக்களே அவரை எதிர்த்துப் போராடக்கூடிய நிலைமை ஏற்படும். எந்த வழியிலாவது புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் ரங்கசாமி நினைக்கிறார். மாநில அந்தஸ்து சம்பந்தமாக யாரும் குறுக்குச் சால் ஓட்ட வேண்டாம். விரைவில் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தப்படும்" எனக் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் தேனி.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமி காந்தன், கே.எஸ்.பி.ரமேஷ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.