பஞ்சாபில் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்ட அம்ரித் பால் சிங். அவரும் அவரது ஐந்து உதவியாளர்களும் கடத்தல், திருட்டு, கலவரம், காயம் ஏற்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு கைது நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர். இது பஞ்சாப்பின் அமிர்தசரஸில் பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்தது.
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித் பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூஃபான் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் வெடித்தன. 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவரின் ஆதரவாளர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்தியபடி அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை உடைத்தனர். போராட்டத்தின் மத்தியில் 6 போலீசார் காயமடைந்து அஜ்னாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித் பால் சிங், “இந்த வழக்கில் எஃப்ஐஆர் அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் எஃப்ஐஆரை ரத்து செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அம்ரித் பால் சிங், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தனது உதவியாளர்களில் ஒருவர் நிரபராதி என்றும் அவர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறினார்.
“நாங்கள் காலிஸ்தான் வழக்கை மிகவும் அமைதியான முறையில் தொடர்கிறோம். மக்கள் இந்து தேசத்தைக் கோரும்போது, காலிஸ்தானுக்கான கோரிக்கையை எங்களால் ஏன் எழுப்ப முடியாது” என்று சிங் கூறினார். மேலும் “மறைந்த பிரதமர் இந்திரா காந்தி காலிஸ்தான் இயக்கத்தை எதிர்ப்பதன் விலையை கொடுத்தார். பிரதமர் மோடி, அமித் ஷா அல்லது பகவந்த் மான் யாராக இருந்தாலும் எங்களை யாராலும் தடுக்க முடியாது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை” என்றார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலை விதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தலை விதியைப் போலவே இருக்கும் என்று சிங் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.