Skip to main content

"நாம் செய்யும் இதனை பாகிஸ்தான் செய்வதில்லை" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

rss chief

 

அசாம் மாநிலத்திற்கு இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், சி.ஏ.ஏ-வால் இந்திய முஸ்லிம்கள் எந்த இழப்பையும் சந்திக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

புத்தக வெளியீட்டின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது வருமாறு;

 

மதச்சார்பின்மை, சோஷலிசம், ஜனநாயகம் ஆகியவற்றை நாம் உலகிலிருந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை.அவை நம் மரபுகளில், நம் இரத்தத்தில் உள்ளது. நம் நாடு இவற்றை செயல்படுத்தி உயிரோடு வைத்திருக்கிறது. இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி உருவாக்கப்படவில்லை. சி.ஏ.ஏ காரணமாக இந்திய முஸ்லிம்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார்கள்.

 

நாடு சுதந்திரமடைந்த பிறகு, சிறுபான்மையினரைக் கவனித்துக் கொள்வோம் என முதல் பிரதமர் தெரிவித்தார். அது இப்போது வரை செய்யப்பட்டு வருகிறது. அதை நாம் தொடர்ந்து செய்வோம். பாகிஸ்தான் அவ்வாறு செய்யவில்லை. அனைத்து நாடுகளுக்கும் அவர்களது குடிமக்கள் யார் எனத் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி அரசியல் களத்தில் உள்ளது. அரசாங்கம் அதில் ஈடுபட்டுள்ளது. அரசியல் லாபத்திற்காக இந்த இரண்டு விவகாரங்களையும் சுற்றி, வகுப்புவாத பிரச்சாரத்தை உருவாக்குகிறார்கள்.

 

இவ்வாறு மோகன் பகவத் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார். 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.