நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாகுபாடற்ற முறையில் செயல்படுவதாகக் கூறி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் உட்பட அனைத்து இந்திய கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.