கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதே நேரம் கூட்டணி குறித்த பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் மட்டும் இல்லாது எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க குமாரசாமி விரும்பவில்லை. பெரும்பான்மையுடன் நாங்கள் வென்று கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தேவகவுடா.