நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி வருகிறார்.
அதில், கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும். நடப்பாண்டில் இந்தியா 7 சதவிகித பொருளாதார வளர்ச்சியைக் காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மற்ற வளர்ந்த நாடுகளை விட அதிகம். உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது. உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்தியப் பொருளாதாரம் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இருக்கும். சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகிறது. பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுக் கால பாஜக ஆட்சியில் 10வது இடத்திலிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதால் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை மேம்படுத்த முடியும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 9.6 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களுக்காக நிதி அமைக்கப்படும். 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவுத் தளங்கள் உருவாக்கப்படும். வேளாண்துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இந்த நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ. 2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும். 2023ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும். சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.