தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 3 நாட்களாக திட்டங்கள் தொடர்பான அம்சங்களை விளக்கி வருகிறார். இந்நிலையில் நான்காம் நாளான இன்று டெல்லியில் நடைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் தற்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டம். வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படும். நிலக்கரி இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நிலக்கரி கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் பயன்படுத்தப்படும். சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில் இறக்குமதி தடை செய்யப்படும்.
பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும். ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். ஆயுத உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 74% சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும்.
சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவை ஆயிரம் கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வான் பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்திய வான் பரப்பை பயன்படுத்துவதில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் விமான நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி மிச்சமாகும்.
இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். புதுச்சேரி உள்ளிட்ட 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்படுகிறது. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வு, விண்வெளிப் பயணம் உள்ளிட்டவற்றை தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ளலாம். இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க தனிமங்கள் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்த கதிரியக்க தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதேபோல் உணவு பதப்படுத்தும் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகள் உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.