2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான நேற்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதனையடுத்து இரண்டாம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவையில் பேசிய நிர்மலா சீதாராமன், வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு முன்வைத்துள்ளது.
அதன்படி,
விவசாயிகளுக்கு கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
பால், காய்கறிகளை கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்.
20 லட்சம் சூரிய ஒளி பம்ப்செட்டுகள் அமைக்க நிதியயுதவி வழங்கப்படும்.
ரசாயன உரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷி உடான் புதிய திட்டம்: விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்ல விமானப் போக்குவரத்து வசதி.
விவசாயம், நீர்ப்பாசனம், கிராமப்புற மேம்பாட்டுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனங்களை போல மீன்வர்களுக்கும் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் உருவாக்கப்படும்
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.
ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.
முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம்
பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .