துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என இந்திய ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லியின் பார்வை ஓபிஎஸ் மீது நீண்ட நாட்களாக படாமல் இருந்தது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு மூலமாக டெல்லி பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளதாக செய்திகள் வந்தது.
இதையடுத்து நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ், இன்று (24.07.2018) டெல்லியில் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்திக்கிறார். பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்கவும் முயற்சிகள் நடந்து வந்ததாகவும் செய்திகள் பரவின ஆனால், அமித்ஷா இது நரம் வரை ஓபிஎஸை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற கூறப்பட்டு வந்தது. மேலும் இந்திய ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கபோவதாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் இது அரசியல் பயணம் இல்லை. எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தரப்பில் அதிமுக எம்.பி மைத்திரேயனை சந்திக்கத்தான் நேரம் ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ்ஸை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் நிர்மலா சீதாராமன் சந்திப்பு இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படி பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு நன்றி சொல்லச்சென்ற ஓபிஎஸ்ஸை சாந்திக்கூட நேரமில்லை என டெல்லிக்கு வந்தபின் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாஜக ஓபிஎஸ்ஸை தட்டிகழிக்கிறதா? என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.