Skip to main content

கண்ணீருக்கு காரணமான 'நீரிடி'- நிலச்சரிவின் பின்னணி 

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
nn

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. கேரளத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (30/07/2024) மாலை 6.30 மணி நிலவரப்படி இந்த நிலச்சரிவில் சிக்கி 106 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குழந்தைகள் உட்பட 106 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 98 பேரை காணவில்லை என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரளாவில் இதுபோன்ற ஒரு பேரழிவு இதுவரை நிகழ்ந்ததில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முண்டகை பகுதிக்கு செல்வதற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு பாதிப்புக்கு முக்கிய காரணமாக 'நீரிடி' பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

முண்டகை பகுதியில் உள்ள மலையின் மேல் அமைந்துள்ள ஆற்றில் நீரிடி பாதிப்பு ஏற்பட்டது இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மலைப்பகுதிகளில் பூமிக்கு அடியில் நீரோட்டத்தில் இருக்கும் அழுத்தம் கனமழையின் போதோ, அதீத கனமழையின் போதோ அதிகரிக்கும். அந்த அழுத்தத்தின் வெடிப்பு 'நீரிடி' என்று கூறப்படுகிறது. மலைப் பகுதிகளில் சில இடங்கள் தளர்வுடன் இருக்கும் பட்சத்தில் நீரிடி அழுத்த விளைவின் காரணமாக நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அந்த வகையில் ஏற்பட்ட நிலச்சரிவு இது என தகவல்கள் வெளியாகி உள்ளது. வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மூன்று முறை இந்த நீரிடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள சூரல்மலா மற்றும் முண்டகை பகுதிகளுக்கு இடையே கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவு உள்ளது. முண்டகை மலைப்பகுதியில் ஏற்பட்ட நீரிடி பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு சூரல்மலா பகுதி வரை பாதிப்பை ஏற்படுத்தி, தற்போதுவரை 106 பேரை பலி கொண்டு கடவுள் தேசத்தின் கண்ணீருக்கு காரணமாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்