கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தனது மகளின் இறப்பை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங், "ஆஷா தேவியின் நான் உணருகிறேன். அதேநேரம், அவர் சோனியா காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும். நளினிக்கு மரண தண்டனை வழங்க வேண்டாம் என கூறி அவரை சோனியா மன்னித்தார். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால் நாங்கள் மரண தண்டனைக்கு எதிராகவும் இருக்கிறோம்" என தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள நிர்பயாவின் தாயார், "அத்தகைய ஆலோசனையை எனக்கு வழங்க இந்திரா ஜெய்சிங் யார்? குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று முழு நாடு விரும்புகிறது. இவரைப் போன்றவர்கள் இருப்பதால், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை" என தெரிவித்துள்ளார்.