ஜம்முவில் உள்ள விமானப் படைத்தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவென கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்திய சில தினங்களில், விமானப் படைத்தளம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விநியோகிக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில், விமானப் படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகும், அங்கு ட்ரோன்களின் நடமாட்டம் இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜம்மு விமானப் படைத்தளத்தில் தாக்குதல் நடைபெற்ற அதே ஞாயிற்றுக்கிழமையன்று, பாகிஸ்தானில் அமைந்துள்ள இந்திய தூதரகப் பகுதிக்குள் ட்ரோனின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, இந்தியா பாகிஸ்தானிடம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியத் தூதரத்திற்குள் ட்ரோனின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.