குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து, லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி அவர் தற்போது கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேக்தா தன்னுடைய ‘ஷெல்’ நிறுவனங்களை பயன்படுத்தி 1,201 கோடி ரூபாயை மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பூர்வி மேக்தா துபாய் மற்றும் ஹாங்காங்கில் ஷெல் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொடுக்கப்பட்ட உத்தரவாத கடிதத்தை வைத்து ஆக்ஸிஸ் வங்கியின் ஹாங்காங் கிளையில் 1201 கோடி பெற்றுள்ளார்.
ஒரு வங்கியின் உத்தரவாத கடிதம் இருந்தால் மற்றொரு வங்கியில் கடன் பெறுவோர் தொகையை திரும்ப அளிக்கத் தவறினால் கடன் மற்றும் அதற்குரிய வட்டியை உத்தரவாத கடிதம் அளித்த வாங்கி கொடுக்கும். இப்படி ஒரு கடிதத்தையே பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடிக்கு வழங்கியுள்ளது. இதனை வைத்து கடன் வாங்கினார் என தற்போது அமலாக்கத்துறையினர் பூர்வி மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதில் ஊழியர்களும் தவறு செய்துள்ளனர் என கூறி தனக்கு எதிரான குற்றச்சாட்டை பூர்வி மேக்தா மறுத்துள்ளார்.