
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
25 லட்சம் பேர் பின்தொடர்ந்து வரும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் திடீரென்று முடக்கியதாகவும், பின்னர் அது மீட்கப்பட்டதாகவும் ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், ஹேக்கர்களின் பதிவுகள் நீக்கப்பட்டு, மோடியின் கணக்கு சரி செய்யப்பட்டதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அது வெளிநாட்டில் இருந்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த எட்டாம் தேதி, தேதியிடப்பட்ட இந்த மின்னஞ்சலில் 'பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும்' என்ற மூன்று வார்த்தைகளை மட்டுமே இடம்பெற்றிருந்ததாகவும், இந்த மின்னஞ்சல் வெளிநாட்டில் இருந்துவந்துள்ளதாகவும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி., பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இமெயில் குறித்து விசாரிக்க 'ரா', உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.