அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. இரண்டாம் வெற்றியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தனது அடுத்த இலக்காக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத்தில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஊர்வலமாகச் சென்று நான்கு மாநில வெற்றியை கொண்டாடினார் மோடி.
இப்படி பாஜக, ஆம் ஆத்மியின் அடுத்த தேர்தல் மோதலாக குஜராத் உருவெடுத்துள்ளது. இன்று குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடியில் அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தொடர் தோல்வி முகத்தைக் கண்டுவரும் காங்கிரஸ் என்ன நிலைப்பாடுகளை குஜராத் சட்டமன்ற தேர்தலில் எடுக்கப் போகிறது என்பது அரசியல் நோக்கர்களால் உற்றுக்கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான், திக்விஜய்சிங் உள்ளிட்டோர் பங்குபெற்றுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.