ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் 3 எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட குழுவை உக்ரைனின் எல்லை மற்றும் அண்டை நாடுகளுக்கு அனுப்பி தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட 10 பேர் கொண்ட தமிழக சிறப்பு குழு சந்திப்பு மேற்கொண்டு உக்ரைனின் எல்லை மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரியது. இதுவரை தமிழகத்தை சேர்ந்த 777 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களையும் விரைந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகத்தின் சிறப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி திருச்சி சிவா, ''அங்கிருந்து வெளியே வருவதற்கு இரண்டு மார்க்கங்கள் இருக்கிறது. பேருந்தில் வர 500 டாலர், ரயிலில் வருவதென்றால் இலவசம். ரயில் உள்நாட்டு மக்களுக்காகஇயக்கப்படுகின்ற காரணத்தால் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 20 பேர் மட்டும்தான் அதில் செல்ல முடியும். இதனால் இந்திய மாணவர்கள் எந்த பாகுபாடும் பார்க்காமல் யார் முதல் 20 பேர் இரண்டாம் 20 பேர் என முடிவெடுத்து மிக ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல் விமானத்திலும் அனைத்து மாநில மாணவர்களும் பாகுபாடின்றி அழைத்து வரப்படுகிறார்கள். மாணவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மீட்கப்படுவதில் மொழிப் பாகுபாடு இருப்பதாகப் புகார்கள் இருந்த நிலையில் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார்.