Skip to main content

யுபிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்!

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
New chairman appointed for UPSC

இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட மனோஜ் சோனி கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2029 ஆம் ஆண்டு வரையுள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இவரது இந்த நியமனத்தின் போது ஒரு அரசியல் அமைப்பு ஆணையத்திற்கு நடுநிலையான நபரைத் தேர்ந்தெடுக்காமல், கட்சியைச் சார்ந்தவர் போன்று இருக்கும் மனோஜ் சோனியைத் தலைவராக எப்படி நியமிக்க முடியும் என ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்மைக் காலமாக யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜை  கேட்கர் பல்வேறு முறைகேடுகள் செய்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது அம்மலமாகியிருந்த நிலையில் யுபிஎஸ்சியின் தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யுபிஎஸ்சிக்கு புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலாளரும் ஆவார். மேலும் ப்ரீத்தி சுதன் யுபிஎஸ்சியின் புதிய தலைவராக நாளை (01.08.2024) பதவியேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்