புழக்கத்திற்கு வரவிருக்கும் புதிய ரூ.100 நோட்டுகள் - ஆர்பிஐ அறிவிப்பு
புதிய ரூ.100 நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் பணப்பரிவர்த்தனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால், நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியும் ஏற்பட்டது. இதைச் சரிசெய்ய புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அவற்றாலும் பழைய நிலையை மீட்க முடியவில்லை. இதையடுத்து, புதிய ரூ.200 நோட்டுகளை வெளியிட்டது மத்திய ரிசர்வ் வங்கி.
தற்போது, புதிய ரூ.100 நோட்டுகளை அச்சிடவுள்ளதாகவும், ரூ.200 நோட்டுகளின் அச்சுப்பணிகள் நிறைவடைந்தவுடன் நூறு ரூபாய் நோட்டுகளின் அச்சுப்பணிகள் தொடங்கும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய ரூ.100 நோட்டுகளில் எந்தவித மாற்றங்களும் இருக்காது. ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளின் அளவுகள் மாற்றப்பட்டபோது அது ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கமுடியாத நிலையை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு அவை எளிதில் சென்றடைய முடியாமல் போனது. எனவே, அளவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்போவதில்லை என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.