தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தும் நீட் நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் நடத்துகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 18,72,341 மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5.20 வரை நடைபெறுகிறது. இந்த நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
தமிழகம் பொறுத்தவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
நாடு முழுக்க ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடைபெறும் நீட் தேர்வானது, வன்முறை காரணமாக மணிப்பூரில் மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும் தேர்வுக்கான புதிய தேதி விரைவில் முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.