தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஆங்கில வழியில் கல்வி கற்பது தற்கொலைக்குச் சமமான ஒன்று என்.சி.இ.ஆர்.டி தலைவர் டி.பி.சக்லானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பெற்றோர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், போதுமான பயிற்சி இல்லாவிட்டாலும் தங்கள் குழந்தைகளை அத்தகைய பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். இது தற்கொலைக்குச் சமமான ஒன்று ஆகும். அதனால்தான் புதிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை வலியுறுத்துகிறது.
கற்பித்தல் ஏன் தாய்மொழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்? ஏனென்றால் அதுவரை நம் சொந்த தாயை, நம் வேர்களை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். இதையெல்லாம் எப்படி புரிந்துகொள்வது? பல மொழிகள் அணுகுமுறை என்பது பல மொழிகளைக் கற்றுக்கொள்ள ஒரு உந்து சக்தி ஆகும். “ஆங்கில வழி கல்வி அதிகளவு பாடங்கள் திணிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பதில்லை. ஆங்கில வழியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய கலாச்சாரம், மண்ணின் மீதான தொடர்பை இழக்கின்றனர். தாய் மொழியில் கல்வி கற்பது மட்டுமே உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும்.
நாம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறோம். அங்குதான் நமக்கு அறிவு இழப்பு உள்ளது. மொழி அறிவை செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டும். அதை முடக்கக்கூடாது. இதுவரை நாம் ஊனமுற்றவர்களாக இருந்தோம், இப்போது பன்மொழிக் கல்வி மூலம் நம்மை நாமே செயல்படுத்த முயற்சி செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.