அரபிக் கடலில் உருவாகிய டவ்தே புயல், கர்நாடகா, கோவா, மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைக் கடுமையாகத் தாக்கி, உயிரிழப்புகளையும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் மட்டும் 45 பேர்வரை இந்தப் புயலுக்குப் பலியாகியுள்ளனர். மேலும் மற்ற மாநிலங்களைவிட மஹாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களும் பெரும் சேதாரங்களைச் சந்தித்துள்ளன.
குஜராத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருட்டில் மூழ்கியுள்ளன. மேலும் யூனியன் பிரதேசமான டையூவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களைக் கடுமையாகத் தாக்கிய டவ்தே புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு நோக்கி நகர்ந்துவருகிறது.
இதனையடுத்து டவ்தே புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான குஜராத் மற்றும் டையூ யூனியன் பிரதேச பகுதிகளை பிரதமர் மோடி இன்று (19.05.2021) பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதற்குப் பின்னர், உடனடி நிவாரணப்பணிகளுக்காக குஜராத்திற்கு 1000 கோடி நிதியுதவியைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மத்திய அரசு குஜராத்தில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை மதிப்பிட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அமைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இந்தியா முழுவதும் டவ்தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.