புதுச்சேரி அரசியல்வாதிகள் பேனர்கள் வைப்பதில் கில்லாடிகள். தமக்கு பிடித்த தலைவர்களை விதவிதமாய் டிசைன் பண்ணி, வெவ்வேறு அவதாரங்களில் தலைவர்களின் முகங்களை கோர்த்து பல கோணங்களில் பதாகைகள் வைப்பார்கள். தங்கள் தலைவரை ஆஹோ ஓஹோ என புகழ்ந்து வைப்பது ஒரு ரகம் என்றால், எதிர்க்கட்சியினரை சீண்டும் விதமாக வைப்பது மற்றொரு ரகம். இப்படி ரகம் ரகமாக வைக்கப்படும் பேனர்கள் பார்ப்பதற்கு ரசிக்கும் விதமாகவும், சிரிக்கும் விதமாகவும் இருக்கும்.
என்.ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரெங்கசாமி பிறந்தநாள்களின் போதும் அவரது கட்சியினர் வைக்கும் பேனர்களில் அவர் கடவுள்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல அவதாரங்களில் காட்சி தருவார். காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுக்கு சளைத்தவர்களா என்ன? தங்கள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாளில் வித விதமாய் பேனர்கள் வைத்து அசத்துவார்கள். கடந்த பிறந்தநாள் முதலமைச்சரான பிறகான முதல் பிறந்தநாள் என்பதால் புதுச்சேரியையே கலக்கி இருந்தனர்.
இதுபோன்ற பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு அறுவறுப்பாகவும் இருக்கின்றன என சமூக அமைப்புகளும், பொதுமக்களும் புறம் பேசியதால் தனது பிறந்தநாளுக்கு பேனர்கள் வைத்தால் தன் சொந்த செலவில் அகற்றுவேன் நாராயணசாமி கூறியுள்ளார். ஆனாலும் சும்மா இருப்பார்களா.... ஆதரவாளர்கள்!? வருகிற 30-ஆம் தேதி நாராயணசாமிக்கு பிறந்தநாள் வருவதை முன்னிட்டு விதம் விதமாய் பேனர் வைக்க தொடங்கியுள்ளனர்.
விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்துள்ள நாராயணசாமி இலவச அரிசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ... இவற்றிற்கு தடையாக வந்த காவி கலர் பந்துகளை தூக்கி வீசுகிறார், எட்டி உதைக்கிறார். 'நாம எந்த திட்டம் கொண்டு வந்தாலும் கெடுக்கறதே இவங்க பொழப்பாச்சி, அதை தடுக்கறதே நம்ம வேலையாச்சி... புதுச்சேரி வளர்ச்சிக்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்ப்பேன்' என சூளுரைக்கிறார்.
இன்னொரு பேனரில் கிரிக்கெட் வீரராகியுள்ள நாராயணசாமி ஆட்டம் காட்டும் பந்து, ஆட்சி கவிழ்ப்பு பந்து, சூழ்ச்சி செய்யும் பந்து ஆகிய பந்துகளை கிரிக்கெட் மட்டையால் விளாசி தள்ளுகிறார். ஆளுநர் கிரண்பேடியை, பா.ஜ.கவினரை, முன்னாள் முதல்வர் ரெங்கசாமியை.... இப்படி தனது அரசியல் எதிரிகளை விளாசுகிறார் நாராயணசாமி.வித்தியாசமாக வைப்பதாக நினைத்து நாராயணசாமியை வில்லங்கத்தில் மாட்டி விட்டுள்ளனரோ.... அவரது ஆதரவாளர்கள்!? என்கின்றனர் புதுச்சேரிவாசிகள்.
தலைமை கவனிக்கிற மாதிரி பேனர்கள் வைத்தால்தான் பதவி கிடைக்கும் என்கிற குறுக்குவழி அரசியல்தான் இதுபோன்ற பேனர் கலாச்சாரத்தை வளர்க்கிறது என புலம்புகின்றனர் பார்வையாளர்கள்.