இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.