புதுச்சேரி மாநிலம் காரைக்கால்-திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கமலக்கண்ணன். இவர் புதுச்சேரி மாநில அரசின் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக உள்ளார்.
அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி திங்கள்கிழமை இரவு தனது அலுவலக பணிகளை முடித்துவிட்டு காலதாமதமாக வீடு திரும்பிய நிலையில் இரவு 11 மணி அளவில் கடற்கரை சாலையில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அங்கு உள்ள புறக்காவல் மையத்தை கடந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில், முகத்தில் துணியை கட்டியபடி வேகமாக வந்த மர்ம நபர்கள் இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அமைச்சர் கமலக்கண்ணன் கையில் இருந்த 20 ஆயிரம் மதிப்புடைய செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கமலக்கண்ணன் ஓதியஞ்சாலை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் அமைச்சரிடம் நடந்த விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டனர். ஆனாலும் அந்த கேமரா பதிவுகளில் செல்போனை பறித்து சென்ற நபர்களின் முகம் மற்றும் இருசக்கர வாகனத்தின் நிறம், எண் ஆகியவை சரியாக தெரியவில்லை.
அதையடுத்து அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், உணவகங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆனாலும் இரண்டு நாட்களாகியும் செல்போனை பறித்து சென்றவர்கள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. அமைச்சரின் செல்போனை கண்டுபிடிப்பதற்கே காவல்துறையால் முடியாத போது சாமானிய மக்களின் பொருட்களை எப்படி விரைவாக கண்டுபிடிப்பார்கள் என மக்கள் முனுமுனுக்கின்றனர்.