என் அரசியல் வாழ்க்கையில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது! : வெங்கையா நாயுடு உருக்கம்
இந்தியாவின் துணைக் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு, ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் இன்று கலந்துகொண்டு பேசினார். அவர் தான் கடந்துவந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அதில் பதிவிட்டார்.
நாட்டு நடப்புகளைப் பற்றி கருத்து சொல்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இனி அதை பொதுவெளியில் செய்ய முடியாது. ஆனால், உயர் அதிகாரிகளுடன் நிச்சயம் அவை குறித்து விவாதித்து, நாட்டின் வளர்ச்சிக்கான என் பங்கை ஆற்றுவேன் என அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், என் அரசியல் வாழ்க்கையில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக கருத்து தெரிவிப்பதிலும், விவாவிப்பதிலும் எனது ஆர்வம் நீங்கள் அறிந்ததே எனக்கூறிய போது, அங்கு இருந்த பத்திரிகையாளர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். மேலும், பல மூத்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் மற்றும் செய்திகளை நான் வாசிக்கத் தவறியதில்லை என்றார்.
பொதுக்கூட்டங்களையும், பொதுமக்களையும் சந்திப்பதையும் அதற்கான சுற்றுப்பயணங்களையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். அவை இனி கிடைக்கப் போவதில்லை. நான் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றிருக்கிறேன். நாடு முழுவதும் உள்ள 620 மாவட்டங்களுக்குப் பயணித்திருக்கிறேன்.
முன்னர் என் மகன், மகளோடு என்னால் நேரம் செலவிட முடியவில்லை. ஆனால், இப்போது என் பேரக்குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுகிறேன்’ என உருக்கமாக பேசினார்.
- ச.ப.மதிவாணன்