2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். இந்த இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.
இதனிடையே, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை ‘இந்தியா’ கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்ததாகவும், அது தான் மாயாவதி அக்கூட்டணியில் இணையாததற்கு காரணம் என்றும் ஊடகச் செய்திகள் மூலம் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்த செய்தி குறித்து மாயாவதி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘இந்தியா கூட்டணியில் இணையாத கட்சிகளை விமர்சிப்பது தவறான விஷயம். எதிர்காலத்தில் அவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் உதவி தேவைப்படலாம் என்பதையும் கருத்தில் கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும். எதிர்காலத்தை பற்றி யாரும் கணிக்க முடியாது. இப்படிப்பட்ட கருத்துகளை கூறும் கட்சிகள் பிற்காலத்தில் நிறைய சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை தலைவர் போல் நடித்துக் காட்டி கேலி செய்வது நாகரிமற்ற செயல்தான். ஆனால், அதே நேரத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதில் ஆளும் பா.ஜ.க.வும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போலவே நடந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். இந்த விஷயத்தில் மற்றவர்கள் மீது குற்றம்சாட்டிக் கொள்ளாமல், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக்கூடிய கட்சி. ஆனால், இங்கு ராமர் கோவிலை வைத்து அரசியல் நடத்துவது என்பது மிகவும் தவறான செயல். அதுவும், கடந்த சில ஆண்டுகளாக இந்த மதவாத அரசியல் மிகவும் மோசமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிடையே வெறுப்புணர்வை அதிகரித்து நாட்டை பலவீனமாக்கவே செய்யும்” என்று குறிப்பிட்டார்.