இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் யாரும் சமூக வலைத்தளங்களில், கரோனா வைரஸ் குறித்து கருத்துகளையோ, படங்களையோ, எந்த விதமான செய்திகளையும் பதிவிட கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய பிற மாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை மும்பை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரத்தில் தவறான தகவல் பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னியை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.