முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை அதன் ஆண்டுகளை வைத்துக் கணக்கிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து செய்துள்ளது.
அண்மைக்காலமாகவே முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து கேரள அரசு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக புதிய புதிய வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகிறது. ஜார்ஜ் ஜோசப் என்பவர் தொடர்ந்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வந்தார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டியதற்கான காரணமாக அணையின் பாதுகாப்பு தன்மையை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இச்சூழலில் தமிழக அரசு இதற்குப் பதிலடி தரும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அந்த பதில் மனுவில், 'கேரள அரசு அரசியல் காரணங்களுக்காக முல்லைப் பெரியாறு தொடர்பாக மாறி மாறி கருத்துக்களை வைக்கிறார்கள். மரம் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்து பிறகு அதனை நிறுத்தி வைத்ததுள்ளது கேரள அரசு. ஆண்டுகளை வைத்து அணையின் வயதைக் கணக்கிடாமல் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உறுதித்தன்மையைக் கணக்கிட வேண்டும். பெருமழை மற்றும் வெள்ள காலத்தில் நீரைச் சேமித்து வழங்குவதன் அடிப்படையில் அணையின் ஆயுளைக் கணக்கிட வேண்டும். மழை வெள்ளத்தைத் தாங்கி எதுவரை தண்ணீரைச் சேமித்து வைக்க முடிகிறதோ அதுவரையே அணையின் ஆயுட்காலம். முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பும் பலமாக உள்ளதாக நிபுணர் குழுவே கூறியுள்ளது. எனவே கேரள அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ள வேண்டும்' என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.