புதுச்சேரி மாநிலத்தின் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாத வார இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான திட்ட குழு கூட்டம் கடந்த 6 -ஆம் தேதி தலைமை செயலகத்தில் தொடங்கியது. அப்போது திட்ட குழு கூட்டத்தில் எதிர்கட்சி சட்டமன்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நாராயணசாமி திட்டக்குழு கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே புறக்கணித்து வெளியேறினார். இதனால் திட்டக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரசாணையில் திருத்தம் செய்து அனைத்து எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடி தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், தலைமைசெயலாளர், எதிர்கட்சிகளான அதிமுக, பா.ஜ.க, சட்டமன்ற எதிர்கட்சி சட்டமன்ற தலைவர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். திட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி," திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்காக ரூபாய் 8,425 கோடி மதிப்பிடப்பட்டு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 297 கோடி நிதி பற்றாக்குறை உள்ளதால் இதனை பெற முதலமைச்சர் மத்திய அரசிடம் சென்று வலியுறுத்தினார். இந்த பட்ஜெட் புதுச்சேரி மாநிலத்தின் சிறப்பான பட்ஜெட்டாக இருக்கும்" என்றார். அதே சமயம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைளை கண்டித்து திட்ட குழு கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கருப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது.