அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்குவாரியால் ஒரு மலையே சரிந்து விழுந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெந்துரித்தி என்னும் இடத்தில் அனுமதியின்றி கல்குவாரி ஒன்று மலை அடிவாரத்தில் செயல்பட்டு வந்தது. அந்த குவாரியில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கற்களைத் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென மலையின் ஒரு பகுதி சரிந்து கல்குவாரிக்குள் விழுந்தது. இந்த பெரும் விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த பெரும் விபத்து குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் தென்காசியில் கல்குவாரி விபத்தில் ஆறு பேர் சிக்கிக்கொண்ட நிலையில் இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.