மஹாராஷ்ட்ர மாநிலம் பிவண்டியில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் பலியானவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. எதிர்பாராத இந்த விபத்தால், அந்த குடியிருப்பில் வசித்துவந்த குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்த தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 20 பேர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
மேலும் இடிபாடுகளில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "மராட்டிய மாநிலம் பிவண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.