உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.